2017/03/15

ராஜபக்சவுடன் நட்பு பாராட்டுதல்                சுகத் ராஜபக்சவை முதன்முதலாக சந்தித்தபோது அவனுடன் பேசுவதற்கான விருப்பம் இவனிடத்தில் தோன்றாமல் போனதற்கு முழு முதற்காரணமாக இருந்தது ராஜபக்சவுடன் வந்திருந்த மிக அழகான இரு சிங்களப் பெண்கள்தான் எனும் உண்மையை இவன் யாரிடத்திலும் எந்த காலத்திலும் சொல்லியது கிடையாது. அதற்கான தேவையும் எப்போதும்  தோன்றியதில்லை, காரணம் சுகத் ராஜபக்சவுடனான இவன் நட்பு ஈசலின் வயதினை விட பத்து மணிநேரம் குறைவானது. காலை ஒன்பது மணிக்கு அறிமுகமாகி, மதியம் ஒரு மணிக்கு ஒன்றாக புகைப்பிடித்து, மாலை ஆறு மணிக்கு ஒன்றாகக் கடற்கரைக்குச் சென்று, கடற்கரையில் இரண்டு மணி நேரங்கள் சில கதைகளை பேசிவிட்டு, பக்கத்தில் இருந்த பானி பூரி கடையில்பேல் பூரிசாப்பிட்டுவிட்டு, மது விடுதியினை தேடிச் சென்று பீர் அருந்தி முடித்து இரவு பத்து மணிக்கு மதுவிடுதியை விட்டு வெளியேறி, அருகில் இருந்த உணவகத்தில் கொத்து பரோட்டாவும் கலக்கியும் உண்டு முடித்து, அங்கிருந்து ஆறு மைல் தூரத்திலிருந்த சுகத்தின் விடுதியை நோக்கி பயணித்து, சரியாக பத்து ஐம்பத்தி நான்குக்கு விடுதியினை அடைந்து, இருவரும் கைகளை அழுத்தி பிடித்து நன்றி சொல்லி விடைபெற்றபோது மணி பதினொன்று!
 
          தொழிலாளர் உரிமை குறித்தான சர்வதேச தொழிற்சங்க கருத்தரங்கம் ஒன்றில் மொழிபெயர்ப்பாளனாய் பணிபுரிந்த இவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை சுகத் ராஜபக்சவுக்கும், சுலானி மெண்டிஸுக்கும், யசோதா பெரெராவுக்கும் தமிழில் பேசப்படும் உரைகளையும், ஐக்கிய ராசிய ஆங்கிலத்தில் பேசப்படும் உரைகளையும் தெற்காசிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூற வேண்டும் என்பதுதான். இலங்கையைச் சேர்ந்த இளம் தொழிற்சங்கவாதிகளான அம்மூவரையும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் இவனிடத்தில் அறிமுகபடுத்திய நேரத்தில் இவனுள் ஆயிரம் தாமரைகளின் வாசத்தை உணர்ந்தான். இந்த கதைக்கும் ஜெனிக்கும், அஸ்வினிக்கும், சுஜித்ராவுக்கும், ப்ரீத்தாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் இவன் இவர்களை எல்லாம் முதன்முதலில் பார்த்தபோது அதே தாமரை வாசத்தைதான் உணர்ந்தான் எனும் செய்தி இங்கு தேவையற்றதாகிவிடுகிறது. உலகில் நடக்கும் அனேக அறிமுகச் சடங்குகளை போலவே அவர்களுடனான அறிமுகமும் கை குலுக்களுடன் ஆரம்பமாகி, சில பல கேள்வி பதில்களுடன் முடிவு பெற்றது. ராஜபக்சவை பார்த்த அடுத்த நொடி இவனுக்கு அவனிடத்தில் கேட்க கேள்வி ஒன்று தோன்றியது, தொண்டைக்குழி வரை வந்த கேள்வியை மேலும் வரவிடாமல் அப்படியே அழுத்தி நிறுத்தியவன் அங்கிருந்து தேநீர் வைக்கப்பட்டிருந்த மேசையை நோக்கி நகர்ந்தான். ராஜபக்சவைப் போலவே சுலானிக்கும், யசோதாவிற்கும் இவனுள் எழுந்த கேள்விக்கும் சிறிதேனும் தொடர்பு இருந்தபோதும் இந்தக் கதையின் கடைசி வரி வரை அக்கேள்வியினை அவர்கள் இருவரிடத்திலும் கேட்க வேண்டும் எனும் எண்ணம் இவனுள் தோன்றாமல் போனது பெரும் ஆச்சரியமான விசயமில்லை.

        வர்கள் மூவரும் ஆசிரியன் முன் அமர்ந்திருக்கும் மாணவர்களைப் போல் இவனை சுற்றி அமர்ந்து அவனுடைய மொழிபெயர்ப்பினைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தொழில்முறை மொழிபெயர்ப்பாளனான இவனும் ஏற்ற இறக்கங்கள் மாறாமல் முடிந்தமட்டும் தெளிவான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்லிக்கொண்டிருந்தான். காத்திரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த கருத்தரங்கத்தின் உணவு இடைவேளையில் சுலாயினியுடனும், யசோதாவுடனும் பேச முற்பட்டு அதில் தோல்வி அடைந்து (முழுமையான தோல்வி என்று சொல்லிவிட முடியாது சில நிமிடங்கள் அவர்கள் இருவரும் இவனிடத்தில் பேசவே செய்தனர், எனவே அதனை தார்மீக தோல்வி அல்லது வெற்றி என்று எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம்) தன் தோல்வியினை மறைக்கும் வண்ணத்தில் ராஜபக்சவுடன் பேசுவதைத் தொடர்ந்தான், குறிப்பாக அப்போது தான் ராஜபக்சவின் முகத்தை முழுமையாகப் பார்த்தான். அடர்ந்த தாடியையும் சுருட்டை சுருட்டையான தலை மயிரினையும் முக்கோண வடிவிலான ஒடுங்கிய முக அமைப்பையும் கொண்டிருந்த அவனது உதடுகள் சிகரெட் புகை படிந்து கருமையேறிப் போயிருந்தன. அவன் முகத்தைப் பார்த்தவுடன் இவனுள் பதுங்கி கிடந்த அந்த கேள்வி மீண்டும் முட்டிமோதி தொண்டையை விட்டு நாவின் வழியாக வெளியேற முயற்சித்து மீண்டும் தோற்றது. இவன் அதைப் பற்றி ஏதும் பேசாமல் பொதுவான விசயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தான். ராஜபக்ச சிகரெட் புகைக்க வேண்டும் என்று சொல்லவே இருவரும் கருத்தரங்கம் நடந்த விடுதியின் மதில் சுவரை ஒட்டியிருந்த பெட்டிக்கடைக்கு சென்றனர். இரண்டுலைட்ஸ்சை வாங்கி ஆளுக்கு ஒன்று புகைத்து முடித்துவிட்டு காசு கொடுக்க காசை எடுத்த இவனின் கைகளை அழுத்தி பிடித்தபடி, ராஜபக்ச சிகரெட்டுக்கான காசை கடைக்காரனிடம் கொடுத்தான்.

       திய உணவுக்கு பிறகான அமர்வுகள் சோம்பலுடனே கடந்தன. எட்டு மணி நேர உடல் உழைப்பு குறித்தும் சரியான கூலி குறித்தும் தீர்கமாய் பேசிய தோழர்களின் உரைகளை தூக்கம் கலந்த தொய்வுடன் அவர்களிடத்தில் மொழிபெயர்த்து கொண்டிருந்தான் இவன். அவர்களும்கூட தூக்கக் கலக்கத்துடனேயே இருந்தார்கள். மொழிபெயர்ப்பின் இடையே அடிக்கடி இவனின் கண்கள் சுலானியியை கவனித்தன, அதை அவளும் கவனிக்கவே செய்தாள். அந்த தூக்கக் கலக்கத்திலும் ராஜபக்ச இடைவிடாது சந்தேகங்களை கேட்டு இவனை இடையூறு செய்தான். ராஜபக்ச கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும் இல்லாமல், சுலானியின் கண்களிலும் இல்லாமல் இவன் தடுமறினான். தேநீர் இடைவெளிக்கான நேரத்தில் மீண்டும் ராஜபக்சவும், இவனும் அந்த பெட்டிக் கடைக்கு சென்று புகை பிடித்துவிட்டு வந்தார்கள். இந்த முறை கடுமையான போராட்டத்துக்குப் பிறகு ராஜபக்சவை சமாதானம் செய்து சிகரெட்டுக்கான பணத்தை இவன் கொடுத்தான். இதற்கிடையே இவன் பேச்சு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சுலானியையும், யசோதாவையும் புகைப்பிடிக்க அழைத்தான். அவர்கள் இருவரும் தங்களுக்கு புகைப் பழக்கம் இல்லை என்று சொல்லி புண்னகையுடன் மறுத்தனர். மீண்டும் ஒரு தார்மீக தோல்வி அல்லது வெற்றியுடன் அவன் புகைபிடிக்கச் சென்றான். இந்த முறையும் அந்தக் கேள்வி அவனை விட்டு வெளியேறி ராஜபக்சவின் காதுகளை அடைய தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் முகத்தை கூர்ந்து கவனித்தான். இவன் அந்த கேள்வியினை கேட்டுவிடக் கூடாது எனும் அச்சத்துடன் ராஜபக்சவின் உதடுகள் துடிப்பதை இவன் பார்த்தான் அல்லது அப்படி கற்பனை செய்துகொண்டான். ஒரு வேளை நிசத்தில் ராஜபக்சவிடம் அந்த கேள்விக்கான பதில் இல்லாமல் இருக்கலாம் அல்லது துக்கம் தோய்ந்த முகத்துடன் அவன் பதில் சொல்லியிருக்கலாம் அல்லது பெருமை புடைக்க பதில் சொல்லியிருக்கலாம். இவனும் அந்த கேள்வியைஅவனிடத்தில் இம்முறையும் கேட்கவில்லை அவனும் அது குறித்து ஏதும் சொல்லவில்லை.

            ருத்தரங்கம் முடிந்து, அன்றைய தினம் அறிமுகமான ஒவ்வொருவருக்காய்  நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டிருந்த இவனிடம் ராஜபக்ச, தனக்கு ஊர்சுற்றிக் காட்டும்படி வேண்டினான். அப்படி அவன் கேட்டது  இவனுள் மின்சாரம் பாய்ச்சிய உணர்வை ஏற்படுத்தியது. வேகமாக சரி என்று தலையாட்டியவன், சுலானியையும் யசோதாவையும் பார்த்து நீங்களும் வருகின்றீர்கள் தானே என்றான். இல்லை என ஒருமித்த குரலில் சொன்ன இருவரும், புறநகர் பகுதியில் வசிக்கும் தங்கள் நண்பன் ஒருவனை சந்திக்க திட்டமிட்டிருப்பதாய் சொன்னார்கள். அவர்களுக்காய், உபேர் ஒன்றை முன்பதிவு செய்து கொடுத்த இவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த ஐந்து நிமிடங்களில் இருவரும் விடைபெற்றார்கள். அதன்பின், ராஜபக்சவை தன் பல்சரின் பின்னிருக்கையில் அமர்த்திக் கொண்டு கடற்கரையினை நோக்கி வண்டியை செலுத்தினான். வேலைநாள் என்பதால் கடற்கரை வெறிச்சோடி இருந்தது, ஆங்காங்கே தெரியும் ஒருசில மனிதத் தலைகளை தவிர்த்து வேறெதுவும் இருக்கவில்லை. காற்றின் வேகமும், அலைகளின் சீற்றமும்  அன்று கூடுதலாக இருப்பதாய் தோன்றியது, தலையை உயர்த்தி நிலவைத் தேடினான். பனிரெண்டாவது நாளின் நிலா அரை வட்டமாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது, பளிச்சென்று மேகங்களற்று கிடந்த வானம் முழுவதிலும் நட்சத்திரங்கள் குவிந்து கிடந்தன. அலைகள் எப்போதுமில்லாத நாளாய் வழக்கமான எல்லையினை தாண்டி நிலத்துக்குள் வந்து சென்றன. இருவரும் அருகிலிருந்த படகுக்கு முகுது சாய்த்து அமர்ந்து கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். தூரத்தில் சிறு ஒளி சிதறல்களாய் ஒளிர்ந்த கப்பலின் விளக்குகளை இவன் எண்ண ஆரம்பித்தான். தென்மேற்கில் ஆரம்பித்த அந்த ஒளி சிதறல்கள் வடக்கு திசை நோக்கி அடுக்கி வைத்தாற்போல் வரிசையாய் நீண்டன. இப்படியே போனால் எங்கள் நிலத்தை அடைந்து விடலாம் என்று சொன்ன ராஜபக்சவினை பார்த்து புன்னகையித்தவன், உங்கள் கடலும் எங்கள் கடலும் வேறு வேறாக இருக்கின்றனவா என்றான். கடலில் என்ன வேற்றுமை இருக்க முடியும் என்று பதில் சொன்ன ராஜபக்ச மீண்டும் கடலை வெறித்து பார்க்க ஆரம்பித்தான். எங்கோ தூரத்தில்  இசைக்கப்படும் புல்லாங்குழலின் ஓசை மெலிதாக அவர்களின் செவிகளை தீண்டி சென்றது. இருவருக்கும் இடையே நிலவிய மௌனத்தின் சுமையை உடைக்கும் பொருட்டு இவன் அவனிடத்தில் உனக்கு வேறு எங்கும் செல்ல வேண்டுமா என்றான்.  தன் காதலிக்கு ஆடை வாங்க வேண்டும், ஏதேனும் கடைக்கு கூட்டிச் செல்ல முடியுமா என்றான். அங்கிருந்து கிளம்பி வழியெங்கும் பெண்கள் ஆடையகங்களை தேடி கடைசியில் சிவப்பு நிற சேலை ஒன்றை வாங்கினார்கள். இவனுக்கு ஏனோ அந்த சேலை பிடித்தமானதாய் இருக்கவில்லை, ஆனால் ராஜபக்ச அந்த சேலை பற்றி நீண்ட தூரம் பேசிக்கொண்டே வந்தான், தன் காதலி அது மிகவும் பிடிக்கும் என்று மீண்டும் மீண்டும் சொன்னான். 

          ணி எட்டைக் கடந்திருந்தது, விடுதிக்கு திரும்புவோமா என்ற இவன் கேள்விக்கு பதிலாய் ராஜபக்ச பீர் குடிப்போமா என்று கேட்டான். வழியிலிருந்த டாஸ்மாக்கிற்கு சென்ற இருவரும் ஆளுக்கு ஒரு பீர் சொன்னார்கள். கருநிறக் குடுவையிலிருந்த, முடை நாற்றமெடுத்த அந்த பீரை நீண்ட நேரம் வெறித்து பார்த்தபடி இருந்த ராஜபக்ச, திடிரென்று 'சீர்ஸ்' என்றான் அதற்காகவே அவ்வுளவு நேரம் காத்துக்கொண்டிருந்த இவன் புட்டியை உயர்த்தினான். இரண்டு மடக்கு பீர் குடலினுள் சென்றவுடன் அதுவரை மரித்துக் கிடந்த அந்த ஒற்றை கேள்வி அவன் மனதிலிருந்து கிழித்துகொண்டு வெளியேறியது, வாந்தி வருபவனை போல் வாயினை அழுத்தி பிடித்து கேள்வியினை வாய்க்குள்ளே அடக்கியவன், ஏதும் பேசாமல் இருப்பதாய் கிகரெட் குடிக்க ஆரம்பித்தான். அதே நேரம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராஜபக்சவின் முகம் வெளிறிப்போய் வேர்த்திருந்தது.  அச்சம் கலந்த பார்வையுடன் இவனைப் பார்த்தான், இவன் ஏதும் பேசாது புகைத்துக் கொண்டிருந்தான். அதற்கு பின் இருவரும் ஒரே மூச்சில் குடுவையில் இருந்த மொத்த பீரினையும் குடித்து முடித்துவிட்டு ஏதும் பேசிக்கொள்ளாது டாஸ்மாக்கை விட்டு வெளியேறினார்கள். 

         வெளியே வந்ததும் ராஜபக்சவிடம் சாப்பிடலாமா என்றான். ஏதும் சொல்லாது தலையாட்டினான் அவன். அருகில் இருந்த உணவகத்தில் இருவருக்கும் கொத்து பரோட்டாவுக்கும், கலக்கிக்கும் சொன்ன இவன், உணவினை ஒரே தட்டில் கொண்டு வருமாறு பரிசாரகனிடம் சொன்னான். இருவரும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான போது ராஜபக்ச தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்றான். அருகே இருந்த மறைவிடத்துக்கு வழிகாட்டிவிட்டு, சிகரெட் ஒன்றை எடுத்தது புகைக்க ஆரம்பித்தான் இவன். அதற்கு பின் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வாகன நெரிசல் குறைந்துவிட்ட சாலையில் வேகமாய் வண்டியை செலுத்தினான் இவன். அடுத்த இருபது நிமிடங்களில்  ராஜபக்ச தங்கியிருந்த (மற்றும் கருத்தரங்கு நடைபெற்ற) அந்த நட்சத்திர விடுதியினை அடைந்தார்கள். இருவரும் சில நொடிகள் அமைதியாக பார்த்துக்கொண்டவர்கள் ஏதும் பேசிக்கொள்ளாது கட்டிப்பிடித்து விடைபெற்றுக் கொண்டார்கள். வண்டியை கிளப்பியவன் மீண்டும் ராஜபக்ச இருந்த இடத்தை திரும்பிப் பார்த்தான், அவன் விடுதிக்குள் செல்லாது அங்கேயே நின்றபடி  வெளிறிய முகத்துடன் இவனை பார்த்துக் கொண்டிருந்தான். மதுவிடுதியில் படிந்திருந்த அச்சத்தின் வடுக்களை ராஜபக்சவின் முகத்தில் அப்போதும் இவன் பார்த்தான்.

             ந்த கேள்வியைக் கடைசிவரை கேட்காமல் விட்டதற்கு ராஜபக்ச தனக்குள்ளே புத்தனுக்கு நன்றி சொல்லிக் கொண்டதாக வீட்டுக்கு செல்லும் வழியில் இவன் நினைத்துக் கொண்டான்.

            இக்கதையில் சுலானிக்கும், யசோதாவிற்கும் பங்கு என்பது எதுவும் இல்லை என்பதால், இவன் அதற்கு பின் அவர்கள் இருவரையும் வேறு ஒரு சமையத்தில் சந்தித்தான் அல்லது உபேரில் ஏறிய பின் அவர்களை சந்திக்கவே இல்லை அல்லது அவர்களுடன் முகநூலில் நட்பாக தான் இருக்கின்றன போன்றதான  செய்திகள் தேவையற்றதாகிவிடுகின்றது.      

நன்றி அடவி

2016/08/27

கிருஸ்துவின் மறுவருகை அல்லது எல்சா ஹாப்மேன் எடுத்த ஆவண சினிமா

முன் கதை

    வன் எல்சா ஹாப்மேனின் கரங்களைப் பற்றியபடி பேருந்தை விட்டு இறங்கிய அந்தப் பகலின் கடைசி நிமிடங்களில், நூறாண்டுகளுக்குப் பிறகான மேக வெடிப்பொன்று தாக்குவதான தோரணையில், கருமேகங்கள் பலமாக மழைத்துளிகளாய் சிதறிக்கொண்டிருந்தன. மாலைநேர மழையின் வேகத்தில் அடங்கிக் கிடந்த அந்த சிறிய கிராமத்தில், மழையின் ஓசையைத் தவிர்த்து வேறேதும் கேட்கவில்லை. பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த கிழவர்கள் அனைவரும் ஒருசேர இமைக்காமல் பார்ப்பதை இவனால் உணர முடிந்தது, எல்சாவும் அப்படி உணர்ந்திருக்க வேண்டும்தான், தாங்கள் தங்கவிருக்கும் தொண்டு நிறுவனத்தின் கட்டிடம் ஊரின் வடக்கு எல்லையில் இருப்பதாய் இவன் காதுகளில் முணுமுணுத்தாள்... அவர்கள் வேறெதுவும் பேசிக்கொள்ளாமல், செம்மண் கலந்த மழை வெள்ளம் திரண்டோடிய வீதியில் வடக்குமுனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு பழுப்பு நிற ஆணுடன், முட்டியளவு மழை வெள்ளத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அரைக்கால் டிரவுசரும், டீ-சர்ட்டும் தரித்தவளாய் நடந்து வந்த வெள்ளைத் தோல் பெண் அந்த சிறிய கிராமத்தின் நிசப்தத்தை முழுவதுமாய் கலைத்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஊரே அவர்களை உற்று நோக்குவதான பிரமை இவனுள் எழுந்தது. சிறகிலிருந்து பறந்தோடிய காக்கைகள் பச்சை குத்தப்படிருந்த எல்சாவின் இடது கையை இறுகப் பற்றிக்கொண்டான்.. இவன் அறியாமலேயே இவனுள் உருவாகியிருந்த ஓர் அசாத்திய வெறுமை பெரும் தவிப்பினை ஏற்படுத்தியிருந்தது. எப்படியாவது போகவேண்டிய இடத்துக்கு சீக்கிரமாய் போய் விடவேண்டும் என்ற முனைப்பில் வேக வேகமாக நடக்க முற்பட்டான். ஆனால் அதிகாலைக் கனவுகளைப் போல், எத்தனை வேகமாய் நடக்க முயன்றும் ஒர் இடத்திலே இருப்பதாய் தோன்றியது. கண்கள் குறித்தான அச்சம் எப்போதும் இவனுள் இருந்துக் கொண்டேதான் இருக்கின்றது. கண்களை நேராகப் பார்த்து பேசுவதென்பது கூட இயலாத காரியம் இவனுக்கு, யாரும் உற்று நோக்காத ஒரு உலகில் வாழும் வேட்கையுடனே எப்போதும் அலைந்து கொண்டிருக்கிறான். ஆனால் அவர்களை மட்டுமே உற்று நோக்கும் ஒரு ஊரின் மொத்தக் கண்களும் இவன் இயல்பை நிலைக்குலைக்கவே செய்தன. இது எதுவும் தெரியாதவளாய் எல்சா மழையினை ஏகாந்தமாய் ரசித்தபடி நடந்து கொண்டிருந்தாள். ஒரு நகரம் அளவேயான சிறிய மேற்கு ஐரோப்பிய நாட்டினைச் சேர்ந்த இவளுக்கு இந்தத் துணைக்கண்டத்தின் தெற்கு மூலையில் இருக்கும் ஒரு சிறு ஊர் பற்றி எப்படித் தெரியும்? இந்த ஊரினை இவள் ஏன் படமெடுக்க வரவேண்டும்? என்று பல கேள்விகள் இவனுள் எழுந்தன, ஆனால் எதையும் அவளிடம் அப்போது கேட்கும் மனநிலையில் இவன் இருக்கவில்லை. இவனுக்கு அப்போது தேவைப்பட்டது எல்லாம் எப்படியாவது, இந்த கண்களிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்பது மட்டும்தான். அவர்கள் தங்கவிருந்த தொண்டு நிறுவனக் கட்டிடம் மிகப் பெரியதாகவே இருந்தது. இருவரையும் விமர்சையாக வரவேற்றார்கள் அந்த கட்டிடத்தை பாதுகாக்கும் முனியம்மாவும், அவள் கணவன் வேடியப்பனும். இவனளவில் விமர்சையாகத்தான், இதுநாள் வரை யாரும் எங்கும் இவனை வரவேற்றது கிடையாது. எனவே "வாங்க" எனும் ஒற்றை வார்த்தையே மிகப் பெரிய வரவேற்பு தான். எல்சாவின் வெள்ளைத் தோலுக்கு துணைக்கண்டத்தில் எப்போதுமே மதிப்பு அதிகம் என்பதால் உன்மையிலேயே வரவேற்பு விமர்சையாகத்தான் இருந்தது. அது எல்சாவுக்கு சங்கடத்தைக் கொடுத்திருக்ககூடும்... “I must admit that I lived with government stipend until last year” என்றாள் இவனிடம். எல்சா அவர்கள் ஊரின் பிச்சைக்காரி என்பதை இவன் முனியம்மாவிடமோ அல்லது வேடியப்பனிடமோ சொல்லவில்லை. பயணக் களைப்பு கண்களையிறுக்க அறைக்குள் புகுந்த உடனே படுக்கையில் விழுந்தான். 
கதை 1

             வர்கள் ஊருக்கு வந்திருக்கு வெள்ளைக்காரியை பார்ப்பதற்காய் காலையிலேயே பலர் கூடிவிட்டிருந்தனர். ஊரார் அவர்கள் இருவரிடமும் எழுப்பவிருந்த மொத்த கேள்விகளுக்கும் ஒரே பதிலாய் கேமராஇருந்தது. எல்சா தான் எதற்காய் இந்த ஊருக்கு வந்திருக்கிறேன் என்பதை ஆங்கிலத்தில் சொல்ல சொல்ல இவன் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் என்ன சொன்னாளோ அதையே பிசிறில்லாமல் சொன்னான் ஒரே ஒரு வார்த்தையை தவிர்த்து. அவள் "Documentary" என்றாள் இவன் "சினிமா" என்று மொழிபெயர்த்தான். இங்கு இருக்கும் குழந்தைகளின் கல்விப் பின்புலம் குறித்தான ஆவணப் படத்தை எடுக்கதான் அவள் ஏழாயிரம் மைல்களைக் கடந்து வந்திருக்கிறாள். அவள் இவனைக் கண்டுபிடித்தது சுவாரசியமானது. எல்சா பிறப்பதற்கு அனேக வருடங்களுக்கு முன் அவள் ஊருக்கு அகதிகளாய் வன்னியிலிருந்து தப்பிச் சென்ற ஒரு குடும்பத்தின் கடைசி பிள்ளையாய் பிறந்து, பின்பு முழு ஐரோப்பியனாய் மாறிவிட்ட, இவன் நண்பனும் பேராசிரியனுமான டாக்டர். சுதர்சன் தில்லைராசா சொன்ன தகவலின் அடிப்படையில் எந்த முன்னறிவிப்புமின்றி ஓர் அதிகாலை இவன் அறையின் வாசலில் நின்றாள். இவனுக்கும் செய்வதற்கு எந்தப் பெரிய வேலைகளும் இல்லாததால் அவள் சொன்னதும் ஒப்புக் கொண்டான். இவன் அறைக்கு எதிரேயிருந்த குமார் தேநீர் விடுதியில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தம் முப்பது நாள் படப்பிடிப்பு, இவன் படத்தின் மேலாளர், மற்றும் மொழிபெயர்ப்பாளர் - 2500 யூரோக்கள் சம்பளம். 2500 * 75 = 187500. அதாவது வரப்போகும் முப்பது நாட்களுக்கு இவனுக்கான சம்பளம் ஒரு லட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து ஐநூறு ரூபாய், இவனது ஒரு வருட வருமானம். மூச்சடைத்தது, ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மலர்ந்த முகத்துடன் எல்சாவுடன் கை குலுக்கினான். இது நடந்து முடிந்து ஒருவாரம் கழித்து அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள், அவள் தன் முழுத் திட்டத்தையும் இவனுக்கு விளக்கினாள். இவனால் ஒரளவு அவள் எதற்காய் இந்த படத்தை எடுக்கின்றாள் என்பதை விளங்கிக்கொள்ள முடிந்தது. அவள் ஊரில் இருக்கும் ஏதோ ஒரு தன்னார்வ அமைப்பு மூன்றாம் உலக நாடுகளின் கல்வித் தரத்தை உயர்த்த ஏதோ திட்டம் வகுக்க இருக்கின்றது அதற்கான ஆரம்ப கட்டப் பணியாக இப்படியான ஆவணப் படங்களை ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் எடுத்து அதை ஆராய்ந்து, பின் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த இருக்கின்றார்கள். இவனுக்கு சிரிப்பு வந்தது கூடவே சில கேள்விகளும் எழுந்தது ஆனால் ஒரு லட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்இவனின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவே அந்த கேள்விகள் எதையும் கேட்காமல் wonderfulஎன்று புன்னகையுடன் சொன்னான். அவள் அத்தனை பற்களும் தெரிய சிரித்தாள்.

       கிருஸ்துவின் மறுவருகை எப்படியிருக்கும் என்பதை எல்சாவினூடாக அறிந்துக்கொண்டான். அந்த ஒட்டுமொத்த கிராமமே அவளைக் கையில் வைத்து தாங்கியது. அவள் தன் வெள்ளை தோலுக்காய் மகிழ்ச்சியடைந்திருக்கக் கூடும். உணவகம், தேநீர்க் கடை, பள்ளிக்கூடம், தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் என்று எங்கும் அவளுக்கு சிகப்புக் கம்பள வரவேற்புகள் வெகு விமர்சையாக இருந்தன. அனேக ஆண்கள் அவளை ஏக்கத்துடன் பார்த்தார்கள், வெள்ளைகாரி மிகச் சுலபமாக படுக்கையறைக்கு வந்துவிடுவாள் என்று அவர்கள் நம்பியிருக்கக் கூடும்சிலர் அப்படி இவனிடம் கேட்கவும் செய்தார்கள். ஏன் தம்பி, ரெண்டு பேரும் ஒண்ணாவே தூங்குறீங்களே?” என்று நமட்டுப் புன்னகையுடன் கேள்வி கேட்டார் வேடியப்பன், இவன் பதிலேதும் சொல்லவில்லை. பெண்களும், குழந்தைகளும் அவளுக்கு மட்டும் தோல் எப்படி அத்தனை சிவப்பாக இருக்கின்றது என்று ஆச்சரியப்பட்டார்கள். சிலர் அவள் தோலை தொட்டு பார்க்க அவளிடம் விருப்பம் தெரிவித்தார்கள். அவளும் பெருமை பொங்க அவர்களை அனுமதித்தாள். "fucking Caucasoid" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் இவன். அவர்கள் இருவரும் பல வீடுகளுக்கு விருந்தினர்களாய் அழைக்கப்பட்டார்கள், இவர்களுக்காகவே விமர்சையாக சமைக்கப்பட்ட கறி விருந்துகளின் வாசனை ஊரின் எல்லையில் பல நாட்களுக்கு படிந்து கிடந்தது. ஒவ்வொரு வீட்டின் விருந்துக்கு பின்னரும் உரையாடல் வேளைகளில் சொல்லி வைத்தாற் போல் வெகு சமிபத்தில் அவர்கள் ஊருக்கு பக்கத்தில் நடந்தேறிய இளைஞன் ஒருவனின் படுகொலையைப் பெருமையுடன் விவரித்தார்கள். முதன்முறையாக அதை கேட்டபோது கண்களைச் சுருக்கி இவனை நோக்கிய எல்சாவிடம் "they are glorifying a brutal murder" என்றான் இவன். அவள் அதிர்ச்சியான தொனியில் “murder?” என்றாள். அவள் அந்த கொலை பற்றி அதிகம் தெரிந்த கொள்ள விரும்பினாள், இவனை விடாமல் ஏன் அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டான் என்று கேட்டப்படியே இருந்தாள். சூரியன் தேய்ந்து கொண்டிருந்த ஒரு அந்திப் பொழுதில் "they killed him because he married a girl he loved" என்று சொன்னான். அவளுக்கு அதை நம்புவதா அல்லது இவன் கிண்டல் செய்கின்றானா என்ற குழப்பம் சில நொடிகள் நோன்றி மறைந்தது. ஏதும் புரியாமல் திரும்பத் திரும்ப தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

            முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு, திருவிழா போல நடந்து முடிந்தது. நடிகர்கள் என்ற பெருமிதத்துடன் குழந்தைகள் நடிக்க செய்தார்கள், அவர்கள் ரஜினியைப் போல், கமலைப் போல் இன்னும் பல நடிகர்களை போல் நடிக்க முயற்சித்தார்கள். கேமராவுக்கு முன் மட்டும் இயல்புக்கு மீறிய அவர்கள் நடவடிக்கை எல்சாவுக்கு ஆச்சரியத்தை தந்தது, இவனிடம் கேட்கவும் செய்தாள். அவளுக்கு விளக்கம் சொல்வதான மனநிலையில் இவன் இருக்கவில்லை, மேலும் அது தேவையற்றது என்றும் தோன்றியது இவனுக்கு. குழந்தைகள் அவள் சொல்லியவற்றை எல்லாம் செய்தார்கள். எல்சா தான் விரும்பிய நாடகம் ஒன்றை ஆவணப் படமாய் பதிவு செய்து கொண்டிருந்தாள். பிள்ளைகள் ஒழுங்காக பாடம் எடுக்காத ஆசிரியர்கள் பற்றி பேசினார்கள், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் தகப்பன் பற்றிப் பேசினார்கள், இடிந்த பள்ளிக் கட்டிடம் பற்றி பேசினார்கள், அவள் எதை எல்லாம் விரும்பினாளோ அதை எல்லாம் அவர்கள் பேசினார்கள். இடையே இரண்டு நாட்கள் ஓய்வுக்கு என்று அருகிலிருந்த சுற்றுலாத் தலத்துக்கு சென்று வந்தார்கள். போகும் வழியெங்கும் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த நீலம், சிவப்பு, மஞ்சள் வர்ணத்திலான மாம்பழ ஓவியங்களை காட்டி ஏன் இவை எல்லா இடங்களிலும் வரையப் பட்டிருக்கின்றது என்றாள். அதைக் காதில் வாங்காதவன்போல் இவன் பேருந்தின் சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஊரிலிருந்த பெரிய அருவியில் காலை மாலை என்று இரண்டு வேளையும் குளித்தார்கள், நிறைய மீன் சாப்பிட்டார்கள், குறைவாக மது அருந்தினார்கள் மிக அதிகமான வெப்பம் குடிப்பதற்குத் தடையாக இருந்தது. இரண்டு தினங்கள் கழித்து கிராமத்துக்கு வந்தார்கள். அடுத்த நாள் முழுவதும் மாடு, ஆடு, குரங்குகள், நான்கு பேர் குடும்பமாய் மோட்டர் சைக்கிளில் பயணிப்பது, உணவகத்தில் சுடப்படும் தோசை, சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது என்று மாண்டேஜ் காட்சிகளை எடுத்தாள் எல்சா. நீ காட்ட விரும்பும் இந்த காட்சிகள்தான் இந்தியா என்று நம்பிவிடாதே, வழக்கமான மேற்கத்திய பார்வைதான் உனக்கும் இருக்கின்றது ஆனால் நீ நினைப்பதைக் காட்டிலும் இந்த துணைக்கண்டம் மிக பெரியது என்று சன்னமான குரலில் அவளிடம் சொன்னான் இவன். அவள் பதிலேதும் சொல்லாமல் தன் கேமராவினை தொடர்ந்து இயக்கினாள்.

கதை 2

      "I don’t believe that I can go back with a neat work, What’s happening around me is BULLSHIT"  என்று ஆத்திரத்துடன் சொல்லிய எல்சாவிடம், "I am just a translator buddy" என்று சொல்லிவிட்டு புக்குமி கொடுத்த மரத்தாலான புத்தர் விகாரத்தை தடவியபடி அவளை கடந்து சென்றான் இவன். அவள் கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாது கையில் ஏந்தியிருந்த காலி மதுக் கோப்பையை நிலத்தில் வீசி எறிந்த வேகத்தில் "fucking Indians" என்று கத்தினாள்.  அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தமிழகத்தின் வடகிழக்கிலிருக்கும் ஆன்மிக நகரம் ஒன்றிலிருந்து பத்து மைல் தொலைவிலிருக்கும் அச்சிறிய கிராமத்துக்கு இவர்கள் வந்து இருபது நாட்கள் கடந்துவிட்டது. நகரத்தில் இருந்த விலை மிகக்குறைவான தங்கும் விடுதி ஒன்றில்தான் தங்கியிருந்தார்கள். அங்குதான் தங்க வேண்டும் என்று அவள் விரும்பினாள், காரணம் அந்த விடுதியில் அதிகப்படியான வெளிநாட்டவர்கள் தங்கியிருந்தார்கள். ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள், ரஷ்யர்கள் - பெருபாலானோர் மாதக் கணக்கில் அங்கு தங்கியிருக்கிறார்கள். அதை முழுமையான விடுதி என்று சொல்லிவிட முடியாது, முதியோர் இல்லமாக தொடங்கப்பட்ட இடம் பின்பு நல்ல வருமானம் காரணமாக விடுதியாக மாற்றம் பெற்றிருக்கிறது. தெருக்கள் எங்கும் கோவில்களும், மடாலயங்களும், காவி உடை தரித்த வெள்ளைக்காரர்களும் நிரம்பிய அந்த ஊரிலிருப்பது இவனுக்கு அயற்சியான ஒன்றாக இருந்தது, எப்படியாவது வெகு சீக்கிரம் அந்த ஊரை விட்டு வெளியேற விரும்பினான். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், விடுதியின் அடுக்களையில் வேலை செய்யும் தேவகியுடன் பேசிப் பொழுதைக் கழித்தான் அல்லது மூன்று தெருக்கள் தள்ளியிருந்த மணி தேநீர்க் கடையின் வாசலில் தவமிருப்பவனைப் போல் எப்போதும் உட்கார்ந்திருந்தான்.  

         "நீங்க படமெடுக்கிறது எல்லாம் இருக்கட்டும், மொதல்ல உங்க சம்பளம் எவ்வுளவுன்னு சொல்லுங்க" என்று அந்த சிறுவனிடமிருந்து வந்த கேள்விக்கு எதிர்வினையாய் கோணலாய் மாறிய இவனின் முக அசைவுகளை உணர்ந்துக்கொண்ட எல்சா என்ன என்பதை போல் பார்த்தாள். இவன்  அச்சிறுவனின் கேள்வியை அவளிடத்தில் ஆங்கிலத்தில் முன்வைத்தான். "nonsense" என்றவளின் முகம் இவனின் முகத்தைப் போலவே கோணலாய் மாறியது. ஆனால் சிறுவனோ விடுவேனா என்று அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கினான். "சொல்லுங்கண்ணா, நீங்க ஒண்ணும் சும்மா படமெடுக்க வந்திருக்க மாட்டீங்க" என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது பேச்சை மாற்ற முற்பட்டான். அவர்கள் பார்த்த இரண்டு ஊர்களுக்குமான வித்தியாசங்கள் மிகவும் அதிகமாகவே இருந்தன. இந்த ஊரின் பிள்ளைகள் இவள் பேசுவதை எதிர்த்துக் கேள்விகள் கேட்டார்கள், இவள் சொல்வது தவறு என்று சில சமயங்களில் வாதிட்டார்கள். தங்கள் வாழ்வில் தினமும் சந்திக்கும் விசயங்களைத்தான் படமாக எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள். எத்தனை முயற்சித்தும் எல்சாவால் தான் விரும்பிய நாடகத்தை அந்த ஊரில் படமாக எடுக்க  முடியவில்லை. பாதி நேரம் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது திணறி நின்றாள். அவள் விரும்பியது எல்லாம் குழந்தைகள் அவர்களின் கல்வி நிலையத்தில் இல்லாத கக்கூஸ் பற்றியும், நேரத்துக்கு வராத ஆசிரியர்கள் பற்றியும், இல்லாத கணினி பற்றியும் பேச வேண்டும் என்பதே. ஆனால் மாணவர்கள் பேசியதை ,பேச விரும்பியதை அவளால் புரிந்துகொள்ளக் கூட முடியவில்லை, அவள் மனம் அப்படி ஒன்றை யோசிக்கக் கூட மறுத்தது அல்லது அது பற்றிய புரிதலின்றி தடுக்கி நின்றது. இவனும் எடுத்துக்காட்டுகளை முன்வைத்து அவளுக்கு விளக்க முற்பட்டாலும் அவள் அதை உள்வாங்கும் விருப்பத்துடன் இருக்கவில்லை, அவள் விரும்பியது எல்லாம் வேறு ஒன்று...அதற்காக எவ்வளவோ முயற்சித்தும் பிள்ளைகள் அதை பேச மறுத்தார்கள். ஒவ்வொரு முறை படப்பிடிப்பு முடியும் போதும் "waste of time and footage" என்று ஆத்திரப்பட்டாள். 

  பிள்ளைகள் இவர்கள் இருவருக்கும் காட்டிய மரங்கள் நிரம்பிய பாதையினூடாக பிரேதமாகிப்போன மாரியப்பன் பயணித்ததும், அவர் தலை உச்சியில் பறந்த நட்சத்திரம் பொறிக்கப்பட்ட நீலமும் சிவப்பும் கலந்த கொடியும்தான் மாணவர்கள் பேச விரும்பியதின் தொடக்கமாக இருந்தது. மாரியப்பனின் சவ ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய ஊர்க் கவுண்டனும், மற்றவர்களும் பாடையில் பறக்கும் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட நீலமும் சிவப்புமான அந்தக் கொடியை அவிழ்த்துவிட்டு பிரேதம் தன் பயணத்தை தொடரலாம் என்று சொன்னதை கேட்க மறுத்ததின் காரணமாய் அப்பிணத்தையும் அவர் ஊரையும் சேர்த்து ஒதுக்கி வைத்தார் ஊர்க் கவுண்டன். பேருந்து நிறுத்தத்துக்கும் கூட போக முடியாமல் பீக்காட்டை சுற்றிக் கொண்டு பள்ளிக்கு போய் வந்தார்கள் பிள்ளைகள். பெரியவர்களோ கூலி வேலைகளைத் தேடி பக்கத்து கிராமங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இதை எப்படி சொல்லியும் எல்சாவால் புரிந்துகொள்ள முடியவில்லை அவளின் ஒரே கேள்வி கொடியை அவிழ்த்தால் என்ன என்பது மட்டும்தான், மேலும் அவள் கவலை எல்லாம் இதற்கும் அவளின் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும்தான். நாட்கள் அதன் போக்கில் கடந்து கொண்டிருந்தன. ஆனால் படம் எந்த அசைவுமின்றி அப்படியே மயக்கத்தில் தேங்கி நின்றது. இவளும் தன்னால் முடிந்தமட்டில் மானவர்களை தன் வழிக்கு மாற்ற முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருந்தாள்.

           மாண்டேஜ் காட்சிகளை எடுப்பதற்காய் கிராமத்துக்கு போயிருந்த அன்றைய தினம், தன் ஆள்காரன் மூலம் இருவரையும் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை சொல்லி அனுப்பிய ஊர்க் கவண்டனை அன்று மாலையே அவர்கள் இருவரும் சந்தித்தார்கள். இருவரையும் வரவேற்ற தலைவர் அவள் வரவு தனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும், அவர்கள் ஊருக்கு வந்த முதல் வெளிநாட்வர் அவள்தான் என்றும் சொன்னார். அது அவளுக்கு கர்வமானன ஒன்றாகத் தோன்றியிருக்க வேண்டும், ஏனெனில் அப்படியான ஒரு புன்னகையைத்தான் பதிலாக சிந்தினாள். எல்சா தான் அங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாள் என்பதை ஆங்கிலத்தில் சொல்ல, தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்த இவனை பார்த்து "I did my college in English" என்று பெருமிதப் புன்னகையுடன் சொன்னார் கவுண்டர். அவன் ஏதும் பேசாது அமைதியானான். மூச்சு விடாமல் பேசிய எல்சாவினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவர் அவ்வப்போது "good, ok" என்று மட்டும் சொல்லியபடி தலையாட்டிக் கொண்டிருந்தார்அவள் பேசி முடித்ததும் "I agree, you do good job. Education good, but you do for our children in village not them" என்று கவுண்டர் சொன்னதை கேட்டவள் ஏதும் புரியாமல் தன் விழிகளை அகல விரித்து இவனை நோக்கினாள். இவன் ஏதும் பேசவில்லை. கவுண்டரின் மனைவி கொண்டு வந்து கொடுத்த காப்பியைக் குடித்து முடித்துவிட்டு இருவரும் விடைபெற்றார்கள். கவுண்டர் சொன்னதின் அர்த்தம் தனக்கு தெரிய வேண்டும் என்ற ஆர்வம் அவளிடத்தில் மேலோங்கியிருந்தது, ஆனால் இவன் ஏதும் பேசாமல் அமைதியாக நடந்துக் கொண்டிருந்தான். கருப்பு, சிவப்பு, காவி, பச்சை என்று பல நிறங்களில் உயர பறந்துக் கொண்டிருந்த கட்சிக் கொடிகளையும், தடி ஊன்றியபடி நின்றிருந்த கண்ணாடி அணிந்த அரை நிர்வாணக் கிழவர் ஒருவரின் சிலையினையும் கடந்த அவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊருக்கு போகும் சாலையில் நடந்துக்கொண்டிருந்தார்கள். உடலெங்கும் நீல நிறம்  பூசப்பட்ட அந்த சிலை அவர்கள் இருவரையும்  மீண்டும் ஒரு முறை ஊருக்குள் வரவேற்றது. அவன் ஏதும் சொல்வான் என்ற ஆர்வம் பொங்க அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த எல்சா "why did he say so? What is the meaning of, children of our village and them?" என்று எழுப்பிய வினாவுக்கு பதிலாய்  "If you want to understand it, then you have to understand the corpse first, then the flag and then this" என்றான் இவன். "I don’t want to understand anything, i just want my film to be done" என்று கோபத்துடன் சொன்னாள். இவன் ஏதும் சொல்லாது நடக்க ஆரம்பித்தான்.     

        தினமும், அறைக்கு திரும்பியதும் எல்சா குடித்துவிட்டு புலம்பித் தீர்த்தாள், எப்பாடுபட்டாவது படத்தை முடித்துவிட வேண்டும் எனும் வேட்கை அவளிடம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. தனிப்பட்ட அளவில் இப்படம் அவளின் வேலைக்கு மிக முக்கியமானதாய் இருந்தது, காரணம் அது அவளின் முதல் படம். இப்படத்தை வைத்துதான் அவள் தன்னை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அது மட்டுமல்லாது மொழி தெரியாத தேசத்தில், தன் ருசிக்கு ஏற்ற உணவுகள் இல்லாமல், நன்பர்கள் இல்லாமல், புரியாத கலாச்சாரம் ஒன்றில் தனி ஒருவளாய் அலைவதென்பது மிகவும் மன அழுத்தம் தருவதாய் இருந்தது. எல்லாமும் ஒன்று சேர்ந்து அவள் மனதை அமைதிகுலையச் செய்தன.  இவனோ அதைப் பற்றி எந்த கவலையுமின்றி ஒவ்வொரு இரவும் புக்குமியின் அறைக்கு சென்று வந்தான். புக்குமி, நகரிலிருக்கும் மடம் ஒன்றுக்கு யாத்திரை வந்தவள், இங்கேயே தங்கிவிட்டாள். அவளுக்கு  ஜப்பானும் கொய்ட்டோவும் வரலாற்றுப் பதிவுகளாய் மாறி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. காசுக்காக அவ்வப்போது ஐரோப்பியன்களுடன் எஸ்கார்ட்டாய் இருப்பாள், போதிய வருமானம் வந்ததும் சில மாதங்கள் ஏதும் செய்யாமல் ஊர் சுற்றித் திரிவாள். தேவகிதான் இவனுக்கு புக்குமியை அறிமுகம் செய்தாள். "வரும் போது சாமியார் கணக்கா வந்தா தம்பி, இப்போ பாரு மாசத்துக்கு ஒருத்தன்னு ஜாலியா இருக்கா" என்றாள்.  பார்த்தது முதல் இவனுக்கு அவள் மீது ஈர்ப்பு இருக்கவே செய்தது, மஞ்சள் நிறத்திலான அந்த சிறிய முகம்  ஆண்களை எளிதில் ஈர்க்கக் கூடியதுதான். அதுமட்டுமில்லாமல் அவளிடம் எப்போதுமே இருக்கும் ஒருவித சோம்பேறித்தனம் இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுக்கும் இவனை பிடித்திருந்திருக்க வேண்டும், அதனால்தான் சந்தித்த இரண்டாவது நாளிலே அவனிடம் தன் காதலை வெளிப்படுத்தினாள்.  அந்தக் காதல்தான் இவனை தனக்கும் தான் வந்த வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைப் போல் புக்குமியுடன் ஊர் சுற்ற வைத்தது. 
     
      எல்சாவின் நாட்கள் வயது முதிர்ந்த சர்ப்பமாய் சுருங்கிக்கொண்டே வந்தன, அவர்கள் அந்த ஊருக்கு வந்து முப்பது நாட்கள் கடந்திருந்தது. மிச்சமாய் அவளிடத்தில் இரண்டு தினங்கள் மட்டுமேயிருந்தன, என்ன செய்வதென்று தெறியாது திக்கி நின்றவள், பல வித யோசனைகளுக்கு பின், முதற்கட்ட படபிடிப்பில் செய்தது போல் இங்கும் மது பற்றிய விழிப்புணர்வு நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதை காட்சியாக்கலாம் என்று முடிவெடுத்தாள். அதை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது கூட்டதிலிருந்த மாணவன் ஒருவன் "ஊருக்குள்ளயே போக முடிலயே மேடம் அப்புறம் எங்க சாராயம் குடிக்கிறது" என்றான். அவள் ஏதும் பேசாது அமைதியாக இருந்தாள். இவன் ஏதும் சொல்லாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். "கக்கூஸ் இல்லங்கிறது பிரச்சனை இல்ல மேடம், பீக்காட்ட சுத்தினு ஸ்குலுக்கு போறதுதான் எனக்கு பிரச்சன. வேனும்னா அதப் படமா எடுங்க, போய் உங்க ஊர்ல காட்டுங்க" என்று தொடர்ந்த மாணவியின் வார்த்தைகளுடன் இவனும் அவளும் மட்டுமே கொண்ட படப்பிடிப்பு குழுவுக்கு கோபம் கொப்பளிக்க 'பேக் அப்' சொன்னாள் எல்சா.

பின்னிணைப்பு

         ப்படியாக, முடிவே இல்லாமல் கிருஸ்துவின் மறுவருகை அல்லது எல்சா ஹாப்மேன் எடுத்த ஆவண சினிமா இவன் சம்பளமாக பெற்றுக்கொண்ட இரண்டாயிரத்து ஐநூறு யூரோக்களுடன் முடிவுக்கு வந்தது.நன்றி: மணல்வீடு