2017/03/15

ராஜபக்சவுடன் நட்பு பாராட்டுதல்                சுகத் ராஜபக்சவை முதன்முதலாக சந்தித்தபோது அவனுடன் பேசுவதற்கான விருப்பம் இவனிடத்தில் தோன்றாமல் போனதற்கு முழு முதற்காரணமாக இருந்தது ராஜபக்சவுடன் வந்திருந்த மிக அழகான இரு சிங்களப் பெண்கள்தான் எனும் உண்மையை இவன் யாரிடத்திலும் எந்த காலத்திலும் சொல்லியது கிடையாது. அதற்கான தேவையும் எப்போதும்  தோன்றியதில்லை, காரணம் சுகத் ராஜபக்சவுடனான இவன் நட்பு ஈசலின் வயதினை விட பத்து மணிநேரம் குறைவானது. காலை ஒன்பது மணிக்கு அறிமுகமாகி, மதியம் ஒரு மணிக்கு ஒன்றாக புகைப்பிடித்து, மாலை ஆறு மணிக்கு ஒன்றாகக் கடற்கரைக்குச் சென்று, கடற்கரையில் இரண்டு மணி நேரங்கள் சில கதைகளை பேசிவிட்டு, பக்கத்தில் இருந்த பானி பூரி கடையில்பேல் பூரிசாப்பிட்டுவிட்டு, மது விடுதியினை தேடிச் சென்று பீர் அருந்தி முடித்து இரவு பத்து மணிக்கு மதுவிடுதியை விட்டு வெளியேறி, அருகில் இருந்த உணவகத்தில் கொத்து பரோட்டாவும் கலக்கியும் உண்டு முடித்து, அங்கிருந்து ஆறு மைல் தூரத்திலிருந்த சுகத்தின் விடுதியை நோக்கி பயணித்து, சரியாக பத்து ஐம்பத்தி நான்குக்கு விடுதியினை அடைந்து, இருவரும் கைகளை அழுத்தி பிடித்து நன்றி சொல்லி விடைபெற்றபோது மணி பதினொன்று!
 
          தொழிலாளர் உரிமை குறித்தான சர்வதேச தொழிற்சங்க கருத்தரங்கம் ஒன்றில் மொழிபெயர்ப்பாளனாய் பணிபுரிந்த இவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை சுகத் ராஜபக்சவுக்கும், சுலானி மெண்டிஸுக்கும், யசோதா பெரெராவுக்கும் தமிழில் பேசப்படும் உரைகளையும், ஐக்கிய ராசிய ஆங்கிலத்தில் பேசப்படும் உரைகளையும் தெற்காசிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூற வேண்டும் என்பதுதான். இலங்கையைச் சேர்ந்த இளம் தொழிற்சங்கவாதிகளான அம்மூவரையும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் இவனிடத்தில் அறிமுகபடுத்திய நேரத்தில் இவனுள் ஆயிரம் தாமரைகளின் வாசத்தை உணர்ந்தான். இந்த கதைக்கும் ஜெனிக்கும், அஸ்வினிக்கும், சுஜித்ராவுக்கும், ப்ரீத்தாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் இவன் இவர்களை எல்லாம் முதன்முதலில் பார்த்தபோது அதே தாமரை வாசத்தைதான் உணர்ந்தான் எனும் செய்தி இங்கு தேவையற்றதாகிவிடுகிறது. உலகில் நடக்கும் அனேக அறிமுகச் சடங்குகளை போலவே அவர்களுடனான அறிமுகமும் கை குலுக்களுடன் ஆரம்பமாகி, சில பல கேள்வி பதில்களுடன் முடிவு பெற்றது. ராஜபக்சவை பார்த்த அடுத்த நொடி இவனுக்கு அவனிடத்தில் கேட்க கேள்வி ஒன்று தோன்றியது, தொண்டைக்குழி வரை வந்த கேள்வியை மேலும் வரவிடாமல் அப்படியே அழுத்தி நிறுத்தியவன் அங்கிருந்து தேநீர் வைக்கப்பட்டிருந்த மேசையை நோக்கி நகர்ந்தான். ராஜபக்சவைப் போலவே சுலானிக்கும், யசோதாவிற்கும் இவனுள் எழுந்த கேள்விக்கும் சிறிதேனும் தொடர்பு இருந்தபோதும் இந்தக் கதையின் கடைசி வரி வரை அக்கேள்வியினை அவர்கள் இருவரிடத்திலும் கேட்க வேண்டும் எனும் எண்ணம் இவனுள் தோன்றாமல் போனது பெரும் ஆச்சரியமான விசயமில்லை.

        வர்கள் மூவரும் ஆசிரியன் முன் அமர்ந்திருக்கும் மாணவர்களைப் போல் இவனை சுற்றி அமர்ந்து அவனுடைய மொழிபெயர்ப்பினைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தொழில்முறை மொழிபெயர்ப்பாளனான இவனும் ஏற்ற இறக்கங்கள் மாறாமல் முடிந்தமட்டும் தெளிவான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்லிக்கொண்டிருந்தான். காத்திரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த கருத்தரங்கத்தின் உணவு இடைவேளையில் சுலாயினியுடனும், யசோதாவுடனும் பேச முற்பட்டு அதில் தோல்வி அடைந்து (முழுமையான தோல்வி என்று சொல்லிவிட முடியாது சில நிமிடங்கள் அவர்கள் இருவரும் இவனிடத்தில் பேசவே செய்தனர், எனவே அதனை தார்மீக தோல்வி அல்லது வெற்றி என்று எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம்) தன் தோல்வியினை மறைக்கும் வண்ணத்தில் ராஜபக்சவுடன் பேசுவதைத் தொடர்ந்தான், குறிப்பாக அப்போது தான் ராஜபக்சவின் முகத்தை முழுமையாகப் பார்த்தான். அடர்ந்த தாடியையும் சுருட்டை சுருட்டையான தலை மயிரினையும் முக்கோண வடிவிலான ஒடுங்கிய முக அமைப்பையும் கொண்டிருந்த அவனது உதடுகள் சிகரெட் புகை படிந்து கருமையேறிப் போயிருந்தன. அவன் முகத்தைப் பார்த்தவுடன் இவனுள் பதுங்கி கிடந்த அந்த கேள்வி மீண்டும் முட்டிமோதி தொண்டையை விட்டு நாவின் வழியாக வெளியேற முயற்சித்து மீண்டும் தோற்றது. இவன் அதைப் பற்றி ஏதும் பேசாமல் பொதுவான விசயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தான். ராஜபக்ச சிகரெட் புகைக்க வேண்டும் என்று சொல்லவே இருவரும் கருத்தரங்கம் நடந்த விடுதியின் மதில் சுவரை ஒட்டியிருந்த பெட்டிக்கடைக்கு சென்றனர். இரண்டுலைட்ஸ்சை வாங்கி ஆளுக்கு ஒன்று புகைத்து முடித்துவிட்டு காசு கொடுக்க காசை எடுத்த இவனின் கைகளை அழுத்தி பிடித்தபடி, ராஜபக்ச சிகரெட்டுக்கான காசை கடைக்காரனிடம் கொடுத்தான்.

       திய உணவுக்கு பிறகான அமர்வுகள் சோம்பலுடனே கடந்தன. எட்டு மணி நேர உடல் உழைப்பு குறித்தும் சரியான கூலி குறித்தும் தீர்கமாய் பேசிய தோழர்களின் உரைகளை தூக்கம் கலந்த தொய்வுடன் அவர்களிடத்தில் மொழிபெயர்த்து கொண்டிருந்தான் இவன். அவர்களும்கூட தூக்கக் கலக்கத்துடனேயே இருந்தார்கள். மொழிபெயர்ப்பின் இடையே அடிக்கடி இவனின் கண்கள் சுலானியியை கவனித்தன, அதை அவளும் கவனிக்கவே செய்தாள். அந்த தூக்கக் கலக்கத்திலும் ராஜபக்ச இடைவிடாது சந்தேகங்களை கேட்டு இவனை இடையூறு செய்தான். ராஜபக்ச கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும் இல்லாமல், சுலானியின் கண்களிலும் இல்லாமல் இவன் தடுமறினான். தேநீர் இடைவெளிக்கான நேரத்தில் மீண்டும் ராஜபக்சவும், இவனும் அந்த பெட்டிக் கடைக்கு சென்று புகை பிடித்துவிட்டு வந்தார்கள். இந்த முறை கடுமையான போராட்டத்துக்குப் பிறகு ராஜபக்சவை சமாதானம் செய்து சிகரெட்டுக்கான பணத்தை இவன் கொடுத்தான். இதற்கிடையே இவன் பேச்சு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சுலானியையும், யசோதாவையும் புகைப்பிடிக்க அழைத்தான். அவர்கள் இருவரும் தங்களுக்கு புகைப் பழக்கம் இல்லை என்று சொல்லி புண்னகையுடன் மறுத்தனர். மீண்டும் ஒரு தார்மீக தோல்வி அல்லது வெற்றியுடன் அவன் புகைபிடிக்கச் சென்றான். இந்த முறையும் அந்தக் கேள்வி அவனை விட்டு வெளியேறி ராஜபக்சவின் காதுகளை அடைய தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் அவன் முகத்தை கூர்ந்து கவனித்தான். இவன் அந்த கேள்வியினை கேட்டுவிடக் கூடாது எனும் அச்சத்துடன் ராஜபக்சவின் உதடுகள் துடிப்பதை இவன் பார்த்தான் அல்லது அப்படி கற்பனை செய்துகொண்டான். ஒரு வேளை நிசத்தில் ராஜபக்சவிடம் அந்த கேள்விக்கான பதில் இல்லாமல் இருக்கலாம் அல்லது துக்கம் தோய்ந்த முகத்துடன் அவன் பதில் சொல்லியிருக்கலாம் அல்லது பெருமை புடைக்க பதில் சொல்லியிருக்கலாம். இவனும் அந்த கேள்வியைஅவனிடத்தில் இம்முறையும் கேட்கவில்லை அவனும் அது குறித்து ஏதும் சொல்லவில்லை.

            ருத்தரங்கம் முடிந்து, அன்றைய தினம் அறிமுகமான ஒவ்வொருவருக்காய்  நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டிருந்த இவனிடம் ராஜபக்ச, தனக்கு ஊர்சுற்றிக் காட்டும்படி வேண்டினான். அப்படி அவன் கேட்டது  இவனுள் மின்சாரம் பாய்ச்சிய உணர்வை ஏற்படுத்தியது. வேகமாக சரி என்று தலையாட்டியவன், சுலானியையும் யசோதாவையும் பார்த்து நீங்களும் வருகின்றீர்கள் தானே என்றான். இல்லை என ஒருமித்த குரலில் சொன்ன இருவரும், புறநகர் பகுதியில் வசிக்கும் தங்கள் நண்பன் ஒருவனை சந்திக்க திட்டமிட்டிருப்பதாய் சொன்னார்கள். அவர்களுக்காய், உபேர் ஒன்றை முன்பதிவு செய்து கொடுத்த இவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த ஐந்து நிமிடங்களில் இருவரும் விடைபெற்றார்கள். அதன்பின், ராஜபக்சவை தன் பல்சரின் பின்னிருக்கையில் அமர்த்திக் கொண்டு கடற்கரையினை நோக்கி வண்டியை செலுத்தினான். வேலைநாள் என்பதால் கடற்கரை வெறிச்சோடி இருந்தது, ஆங்காங்கே தெரியும் ஒருசில மனிதத் தலைகளை தவிர்த்து வேறெதுவும் இருக்கவில்லை. காற்றின் வேகமும், அலைகளின் சீற்றமும்  அன்று கூடுதலாக இருப்பதாய் தோன்றியது, தலையை உயர்த்தி நிலவைத் தேடினான். பனிரெண்டாவது நாளின் நிலா அரை வட்டமாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது, பளிச்சென்று மேகங்களற்று கிடந்த வானம் முழுவதிலும் நட்சத்திரங்கள் குவிந்து கிடந்தன. அலைகள் எப்போதுமில்லாத நாளாய் வழக்கமான எல்லையினை தாண்டி நிலத்துக்குள் வந்து சென்றன. இருவரும் அருகிலிருந்த படகுக்கு முகுது சாய்த்து அமர்ந்து கடலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். தூரத்தில் சிறு ஒளி சிதறல்களாய் ஒளிர்ந்த கப்பலின் விளக்குகளை இவன் எண்ண ஆரம்பித்தான். தென்மேற்கில் ஆரம்பித்த அந்த ஒளி சிதறல்கள் வடக்கு திசை நோக்கி அடுக்கி வைத்தாற்போல் வரிசையாய் நீண்டன. இப்படியே போனால் எங்கள் நிலத்தை அடைந்து விடலாம் என்று சொன்ன ராஜபக்சவினை பார்த்து புன்னகையித்தவன், உங்கள் கடலும் எங்கள் கடலும் வேறு வேறாக இருக்கின்றனவா என்றான். கடலில் என்ன வேற்றுமை இருக்க முடியும் என்று பதில் சொன்ன ராஜபக்ச மீண்டும் கடலை வெறித்து பார்க்க ஆரம்பித்தான். எங்கோ தூரத்தில்  இசைக்கப்படும் புல்லாங்குழலின் ஓசை மெலிதாக அவர்களின் செவிகளை தீண்டி சென்றது. இருவருக்கும் இடையே நிலவிய மௌனத்தின் சுமையை உடைக்கும் பொருட்டு இவன் அவனிடத்தில் உனக்கு வேறு எங்கும் செல்ல வேண்டுமா என்றான்.  தன் காதலிக்கு ஆடை வாங்க வேண்டும், ஏதேனும் கடைக்கு கூட்டிச் செல்ல முடியுமா என்றான். அங்கிருந்து கிளம்பி வழியெங்கும் பெண்கள் ஆடையகங்களை தேடி கடைசியில் சிவப்பு நிற சேலை ஒன்றை வாங்கினார்கள். இவனுக்கு ஏனோ அந்த சேலை பிடித்தமானதாய் இருக்கவில்லை, ஆனால் ராஜபக்ச அந்த சேலை பற்றி நீண்ட தூரம் பேசிக்கொண்டே வந்தான், தன் காதலி அது மிகவும் பிடிக்கும் என்று மீண்டும் மீண்டும் சொன்னான். 

          ணி எட்டைக் கடந்திருந்தது, விடுதிக்கு திரும்புவோமா என்ற இவன் கேள்விக்கு பதிலாய் ராஜபக்ச பீர் குடிப்போமா என்று கேட்டான். வழியிலிருந்த டாஸ்மாக்கிற்கு சென்ற இருவரும் ஆளுக்கு ஒரு பீர் சொன்னார்கள். கருநிறக் குடுவையிலிருந்த, முடை நாற்றமெடுத்த அந்த பீரை நீண்ட நேரம் வெறித்து பார்த்தபடி இருந்த ராஜபக்ச, திடிரென்று 'சீர்ஸ்' என்றான் அதற்காகவே அவ்வுளவு நேரம் காத்துக்கொண்டிருந்த இவன் புட்டியை உயர்த்தினான். இரண்டு மடக்கு பீர் குடலினுள் சென்றவுடன் அதுவரை மரித்துக் கிடந்த அந்த ஒற்றை கேள்வி அவன் மனதிலிருந்து கிழித்துகொண்டு வெளியேறியது, வாந்தி வருபவனை போல் வாயினை அழுத்தி பிடித்து கேள்வியினை வாய்க்குள்ளே அடக்கியவன், ஏதும் பேசாமல் இருப்பதாய் கிகரெட் குடிக்க ஆரம்பித்தான். அதே நேரம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ராஜபக்சவின் முகம் வெளிறிப்போய் வேர்த்திருந்தது.  அச்சம் கலந்த பார்வையுடன் இவனைப் பார்த்தான், இவன் ஏதும் பேசாது புகைத்துக் கொண்டிருந்தான். அதற்கு பின் இருவரும் ஒரே மூச்சில் குடுவையில் இருந்த மொத்த பீரினையும் குடித்து முடித்துவிட்டு ஏதும் பேசிக்கொள்ளாது டாஸ்மாக்கை விட்டு வெளியேறினார்கள். 

         வெளியே வந்ததும் ராஜபக்சவிடம் சாப்பிடலாமா என்றான். ஏதும் சொல்லாது தலையாட்டினான் அவன். அருகில் இருந்த உணவகத்தில் இருவருக்கும் கொத்து பரோட்டாவுக்கும், கலக்கிக்கும் சொன்ன இவன், உணவினை ஒரே தட்டில் கொண்டு வருமாறு பரிசாரகனிடம் சொன்னான். இருவரும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான போது ராஜபக்ச தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்றான். அருகே இருந்த மறைவிடத்துக்கு வழிகாட்டிவிட்டு, சிகரெட் ஒன்றை எடுத்தது புகைக்க ஆரம்பித்தான் இவன். அதற்கு பின் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வாகன நெரிசல் குறைந்துவிட்ட சாலையில் வேகமாய் வண்டியை செலுத்தினான் இவன். அடுத்த இருபது நிமிடங்களில்  ராஜபக்ச தங்கியிருந்த (மற்றும் கருத்தரங்கு நடைபெற்ற) அந்த நட்சத்திர விடுதியினை அடைந்தார்கள். இருவரும் சில நொடிகள் அமைதியாக பார்த்துக்கொண்டவர்கள் ஏதும் பேசிக்கொள்ளாது கட்டிப்பிடித்து விடைபெற்றுக் கொண்டார்கள். வண்டியை கிளப்பியவன் மீண்டும் ராஜபக்ச இருந்த இடத்தை திரும்பிப் பார்த்தான், அவன் விடுதிக்குள் செல்லாது அங்கேயே நின்றபடி  வெளிறிய முகத்துடன் இவனை பார்த்துக் கொண்டிருந்தான். மதுவிடுதியில் படிந்திருந்த அச்சத்தின் வடுக்களை ராஜபக்சவின் முகத்தில் அப்போதும் இவன் பார்த்தான்.

             ந்த கேள்வியைக் கடைசிவரை கேட்காமல் விட்டதற்கு ராஜபக்ச தனக்குள்ளே புத்தனுக்கு நன்றி சொல்லிக் கொண்டதாக வீட்டுக்கு செல்லும் வழியில் இவன் நினைத்துக் கொண்டான்.

            இக்கதையில் சுலானிக்கும், யசோதாவிற்கும் பங்கு என்பது எதுவும் இல்லை என்பதால், இவன் அதற்கு பின் அவர்கள் இருவரையும் வேறு ஒரு சமையத்தில் சந்தித்தான் அல்லது உபேரில் ஏறிய பின் அவர்களை சந்திக்கவே இல்லை அல்லது அவர்களுடன் முகநூலில் நட்பாக தான் இருக்கின்றன போன்றதான  செய்திகள் தேவையற்றதாகிவிடுகின்றது.      

நன்றி அடவி

கருத்துகள் இல்லை: